அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு அதிகபட்ச தண்டனை ஏன்.? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.!

கடந்த 2019ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தின் கர்நாடகாவில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘மோடி’ பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, குஜராத் பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி குஜராத் மாநிலம் , சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில், அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்பளித்தது. 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் தொடர முடியாது எனும் விதியின் காரணமாக கேரளா, வயநாடு எம்பியாக இருந்த ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, தனது 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சூரத் நீதீமன்றம் மற்றும், குஜராத் மாநிலம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இருந்தும், மேல்முறையீடு செய்வதற்கு எதுவாக அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தார் ராகுல்காந்தி. அதன் மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று ராகுல்காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரிகையில், தான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் மன்னிப்பு கோர முடியாது என குறிப்பிட்டு இருந்தார். தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது அதிகபட்ச தண்டனை. இது ஜாமீன் பெறக்கூடாத குற்ற சம்பவ வழக்கு கிடையாது. சாதாரண வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2 நாடளுமன்ற கூட்டத்தொடரை நான் இழந்துவிட்டேன். சாதாரண அவதூறு வழக்கு காரணமாக 8 ஆண்டுகள் மக்கள் மத்தியில் எனது குரல் ஒலிக்க தடை விதிக்கப்படுகிறது. நான் நீரவ் மோடி, லலித் மோடி பற்றி கூறினேன். ஆனால் அவர்கள் எனக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. 13 கோடிக்கும் அதிகமானோர் மோடி சமூகத்தில் உள்ளனர். அனால், பாஜக கட்சியை சேர்ந்தவர் தான் என்மீது வழக்கு தொடர்ந்துள்ளார். என் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளும் பாஜகவினர் தொடுத்தவையே என அந்த பிரமாண பத்திரத்தில் ராகுல்காந்தி குறிப்பிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில், அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதன் காரணமாக தனி நபரின் உரிமை மட்டுமின்றி, அவருக்கு வாக்களித்த ஒட்டுமொத்த வயநாடு தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது. அதிகபட்ச தண்டனை ராகுல்காந்திக்கு ஏன் வழங்கப்பட்டது என இது தொடர்பாக புகார் அளித்த மனுதாரர், குஜராத், சூரத் கீழமை நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
புகார்தாரர் தரப்பில் வாதிடுகையில், ராகுல்காந்தி, குறிப்பிட்டு வேண்டுமென்றே அவமரியாதை செய்ய வேண்டும் என்றே மோடி எனும் பெயர் குறித்து அப்படி பேசியுள்ளார் எனவும் வாதிடப்பட்டது இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.