தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு தந்து தண்டனையை ரத்து செய்யுமாறு ஏமன் அரசை இந்திய அரசு வலியுறுத்தக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.

Nimisha Priya

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்ற, கடைசி நேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிமிஷாவுக்கு ஜூலை 16, 2025 அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இந்திய அரசு ஏமன் அரசை வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு (ரத்தப் பணம்) வழங்குவதன் மூலம் தண்டனையை ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும் என்று கோரி, ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ அமைப்பு இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூலை 14, 2025) உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன்பு நடைபெற உள்ளது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஜேந்த் பசந்த், நிமிஷாவை காப்பாற்றுவதற்கு ஷரியா சட்டத்தின் கீழ் ‘ரத்தப் பணம்’ (தியா) வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய அரசு உடனடியாக ராஜாங்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த வழக்கு, நிமிஷாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முக்கியமான கடைசி வாய்ப்பாகக் கருதப்படுகிறது .நிமிஷா பிரியா, கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2008இல் செவிலியராக பணியாற்றுவதற்காக ஏமனுக்கு சென்ற இவர், 2017இல் தனது வணிகப் பங்குதாரரான தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 2020இல் ஏமன் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். இவரது மேல்முறையீடு 2023இல் ஏமன் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில், மஹ்தி தனது கடவுச்சீட்டை பறித்து, உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாக நிமிஷாவின் குடும்பம் குற்றம்சாட்டியுள்ளது.நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, கடந்த ஒரு வருடமாக ஏமனின் சனாவில் தங்கி, மஹ்தியின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ரத்தப் பணம் வழங்கி மன்னிப்பு பெற முயற்சித்து வருகிறார். இதற்காக ‘சேவ் நிமிஷா பிரியா’ அமைப்பு ரரூ.8.60 திரட்டியுள்ளது, ஆனால் மஹ்தியின் குடும்பம் இதுவரை மன்னிப்பு வழங்க ஒப்புக்கொள்ளவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிமிஷாவின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையில், இந்திய அரசு மற்றும் ஏமன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மஹ்தியின் குடும்பத்தை மன்னிப்பு அளிக்க வைப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏமனில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் சனா இருப்பது இந்த பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கியுள்ளது. இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை, நிமிஷாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் என்ன முடிவு அறிவிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்