ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டதில் முதற்கட்டமாக 50 பேர் சென்னை வந்தடைந்தனர்.!

ஒடிசா விபத்தில் சிக்கியவர்களில் முதற்கட்டமாக 50 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவு பெற்றதாகவும், தற்போது ரயில்வே சீரமைப்பு பணிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினர் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து பற்றி அறிந்தவுடன், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனை தொடர்ந்து, விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. 250 தமிழர்கள் ஒடிசாவில் இருந்து தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என ரயில்வே எஸ்பி பொன்ராம் விளக்கம் அளித்து இருந்தார். தற்போது முதற்கட்டமாக 50 பேர் ஒடிசாவில் இருந்து விமானம் மூலம் தற்போது சென்னை வந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.