மதிமுக – திமுக – அதிமுக – திமுக… கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்து வந்த அரசியல் பாதை…

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய சிறு அரசியல் பயணம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் 1975ஆம் ஆண்டு பிறந்தவர் செந்தில் பாலாஜி. கல்லூரி படிக்கும் காலத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்டதால், பி.காம் கல்வி படிப்பை இடைநிறுத்தம் செய்து வைகோ தலைமையிலான மதிமுகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுப்பட்டார்.
மதிமுக – அதிமுக எம்எல்ஏ :
அதன் பிறகு 1996இல் கரூர் மாவட்டத்தில் கவுன்சிலர் தேர்தலில் நின்று இளம் வயதில் கரூர் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு மதிமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டார். துடிப்பாக அரசியலில் களமிறங்கிய செந்தில் பாலாஜிக்கு 2006இல் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அதிமுக அமைச்சர் :
முதல் தேர்தலிலேயே வெற்றி கண்ட செந்தில் பாலாஜி அதனை தொடர்ந்து 2011 தேர்தலிலும் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைந்த அதிமுக அமைச்சரவையில் இணைந்தார். அவருக்கு போக்குவரத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
பதவி பறிப்பு :
அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான், அரசு வேலை வாங்கி தருவதாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கூறியதாக 33 நபர்களிடம் 2.8 கோடி ரூபாய் வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர். இதனை அடுத்து நடந்த இறுதி அமைச்சரவை மாற்றத்தில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
ஜெ. அமைச்சரவையில் இடமில்லை :
இதனை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு தேர்தலில் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டார் செந்தில் பாலாஜி. அதில் வெற்றி கண்டாலும் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு இடம் கிடைக்கவில்லை.
‘சஸ்பெண்ட்’ செந்தில் பாலாஜி :
இதனை தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு பிரிவுகளாக இருந்த அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு தகுதிநீக்கம் செய்ப்பட்ட 18 எம்எல்ஏக்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர்.
திமுகவில் செந்தில் பாலாஜி :
அதனை தொடர்ந்து, தான் டிடிவி.தினகரன் பக்கம் இருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்து கொண்டு மீண்டும் அதே இளம் துடிப்புடன் செயல்பட்டார் செந்தில் பாலாஜி. 2019 அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் முதலில் அதிமுக சார்பாக வென்ற செந்தில் பாலாஜி , இந்த முறை திமுக சார்பில் நின்று வென்று காட்டி திமுகவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மாற துவங்கினர்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி :
அதனை தொடர்ந்து 2021இல் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் செந்தில் பாலாஜி. மேலும், திமுக சற்று பின்தங்கி இருந்த மேற்கு தமிழகத்தில் திமுகவை புதுதெம்புடன் செயல்பட வைத்தார் செந்தில் பாலாஜி.
அதன் பயனாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 2021 அமைச்சரவையில் டாஸ்மாக் ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை என மிக முக்கிய துறைகள் செந்தில் பாலாஜி வசம் கொடுக்கப்பட்டது.
அமலாக்கத்துறை விசாரணை :
இந்த அரசியல் பயணங்களுக்கு நடுவே தான் 2011 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்பது விசாரணையில் இருந்து கொண்டே இருந்தது. புகார் கொடுத்தவர்கள் சமாதானம் ஆகிவிட்டதாகவும் அதனால் விசாரணை நடத்த தடை எனவும் காவல்துறையை போல, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறையும் இதனை விசாரிக்க தடை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி கைது :
இந்த உத்தரவை அடுத்து, இந்த வழக்கானது டெல்லி உச்சநீதிஅம்மன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை தொடரலாம் என தீர்ப்பு வெளியான பிறகு, அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையை துவங்கியது. அதன் பிறகு தான் வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை என கடந்து அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கைது செய்யப்பட்டார்.
புழல் சிறைத்துறை வசம் செந்தில் பாலாஜி :
தற்போது அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு இருப்பதால் தற்போது புழல் சிறைத்துறை பாதுக்காப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025