அனைத்து மருத்துவ வசதிகளும் தயார்… தமிழக மருத்துவத்துறை செயலாளர் பேட்டி.!

ஒடிசா விபத்தில் மீட்கப்பட்டு தமிழகம் வருபவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் பேட்டி.
ஒடிசா நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேரும் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்த விபத்தில் மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை வர சிறப்பு ரயில்கள் இயக்கப்டுகின்றன.
இதில் 250 பேர் ஒடிசாவிலிருந்து இன்று காலை சென்னை புறப்பட்டனர். இந்த நிலையில் தமிழக மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங், விபத்திலிருந்து மீட்க்கப்பட்டவர்கள் சென்னை வந்ததும் அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்வதற்கு 6 மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, விபத்தில் காயமடைந்தவர்கள் சென்னை வந்ததும் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கும், குறிப்பாக ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 40 படுக்கைகள் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை பிரிவில் 200 படுக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும் இதுதவிர சென்னையின் மற்ற முக்கிய மருத்துவமனைகளிலும் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அனைத்தும் தயார் நிலையில் வைத்திருப்பதற்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றும் மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் தெரிவித்தார்.