மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. கரூரில் வருமான வரித்துறை சோதனை!

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட முன்னாள் அதிகாரிகள், இந்நாள் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிஐ உள்ளிட்டவைகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், கைது நடவடிக்கையும் மேற்கொண்டு பல்வேறு ஆவணங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்எம் காலனியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள மகேஸ்வரியின் வீடு, சுகாதார ஆய்வாளர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. கொரோனா காலத்தில் கிருமி நாசினி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக மகேஸ்வரி மீது புகார் எழுந்துள்ளது. இதுபோன்று, கரூர் – ஈரோடு சாலையில் உள்ள சக்தி மெஸ் கார்த்தி இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட இல்லத்தில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.