”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!
இந்திய எல்லையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்குள் எந்த எதிரி விமானமும் வர அனுமதிக்கப்படவில்லை என்று துணை அட்மிரல் ஏ.என். பிரமோத் தெரிவித்துள்ளார்..

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை அதிகாரிகள், டெல்லியில் இரண்டாவது நாளாக இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்திற்குப் பிறகு இரு நாடுகளின் எல்லைகளிலும் நிலைமை எப்படி இருக்கிறது? போர் நிறுத்தத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன? வீரர்களுக்கு என்ன வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன? இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இதுபோன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
அப்பொழுது, ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத்,” முப்படைகளின் ஒருங்கிணைப்பு இருந்ததால், எதிரி விமானங்கள் நமக்கு அருகே கூட வர முடியவில்லை. எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விட்டோம், தேர்ந்தெடுக்கும் இலக்கை துல்லியமாகத் தாக்கும் அளவுக்கு இந்திய கடற்படை வலிமையானது.
பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியாவின் அனைத்து படைப்பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன. போர்க்கப்பல்ல் இருந்து போர் விமானங்களை இயக்கவல்ல சக்தி கொண்டதாக கடற்படை இருக்கிறது. எளிமையாகச் சொன்னால், சந்தேகத்திற்கிடமான அல்லது எதிரி விமானங்கள் எதுவும் நூறு கிலோமீட்டர் தூரம் நெருங்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார்.
அனைத்து தளங்களிலும் இருந்து வரும் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம், கடற்படை கண்காணிப்பு தொடர்கிறது. ஆபத்து வந்தால் உடனடியாக கண்டுபிடித்து முறியடிப்போம். வணிக, போர் விமானங்களை அடையாளம் காணும் உயர்தர தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.