“ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து” – ஓபிஎஸ் அறிக்கை

O Panneerselvam

தி.மு.க., இரண்டு ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வினை ரத்து செய்ய எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது என ஓபிஎஸ் அறிக்கை 

அந்த அறிக்கையில், ‘ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து” என்று மேடைக்கு மேடை முழங்கி அதன்மூலம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க., இரண்டு ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வினை ரத்து செய்ய எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது.

இதன் காரணமாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் செல்வன் தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி கனிமொழி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி சௌந்தர்யா என்ற வரிசையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவர் செல்வன் பரமேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்த செல்வன் பரமேஸ்வரன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“மனதில் உறுதி வேண்டும்’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப மாணவ, மாணவியர்கள் மன திடம் படைத்தவர்கள். இருப்பினும், ‘ஏமாற்றப்பட்டு விட்டோமே’ என்கிற மன உளைச்சல், மருத்துவக் கனவு பலிக்காதோ என்கிற கவலை, நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தால் பெற்றோர்களுக்கு நிதிச் சுமை ஏற்படுமோ என்கிற சங்கடம் போன்றவைதான் மன அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணங்களாகும். இதன் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி இதுபோன்ற விபரீத முடிவுகளை மாணவ, மாணவியர் எடுக்கின்றனர்.

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு எழுதுவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் உள்ள நிலையில், வாழ்க்கையில் உயர் கல்வி பயிலுவதற்கு மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாரா பாடப் பிரிவுகள் பல இருக்கின்ற நிலையில், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி என பல்வேறு தேர்வுகளை எழுதி மிக உயர்ந்த அரசு பதவிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் மாணவ, மாணவியருக்கு உள்ள நிலையில், இதுபோன்ற விபரீத முடிவுகளை மாணவ, மாணவியர் எடுப்பது மிகுந்த மனவேதனையை எனக்கு அளிக்கிறது.

மாணவச் செல்வங்கள் வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், இதுபோன்ற விபரீத முடிவுகளை மாணவ, மாணவியர் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களிடம் ஏற்படுத்தவும், நீட் தேர்வினை ரத்து செய்யவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாணவச் செல்வங்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir