மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கைகளின்படி, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இதயத் துடிப்பில் சில வேறுபாடுகள் கண்டறியப்பட்டு, அதற்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
பின்னர், ஜூலை 24ம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் இரண்டு நாட்களில் தனது வழக்கமான பணிகளை மீண்டும் தொடருவார் என்று குறிப்பிடப்பட்டது.
மேலும், ஜூலை 24 அன்று வெளியான மற்றொரு அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஜூலை 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) க்குள் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர் மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 27, 2025) அப்போலோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முதல்வர் வீடு திரும்ப உள்ள நிலையில், காவல்துறையினர் அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துமனை தரப்பில் வெளியான அறிக்கையின்படி, அப்பல்லோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதலமைச்சர் இன்று மாலை இல்லம் திரும்புகிறார். முதலமைச்சர் நலமாக இருக்கின்றார், அடுத்த மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளார்.