மருத்துவமனையில் இருந்தவாறே மீண்டும் அலுவல் பணியை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.!
சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்த முதல்வர் ஸ்டாலின் அலுவல் பணிகளை மீண்டும் இன்று தொடங்கினார்.

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், மருத்துவர்கள் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்தாலும், அவர் மருத்துவமனையில் இருந்தவாறே அரசு பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.
ஆஞ்சியோ பரிசோதனைக்கு பின் ஓய்வில் இருந்த ஸ்டாலின், ஹாஸ்பிடலில் இருந்தவாறே இன்று மீண்டும் தனது அலுவல் பணியை தொடங்கியுள்ளார். சற்றுமுன் மருத்துவமனைக்கு வருகை தந்த தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யும் அவர், முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் கொடுக்கிறார்.
முன்னதாக, கடந்த ஜூலை 22ம் தேதி அன்று, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தத்துடன் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார். இத்திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 5,74,614 மனுக்களின் தீர்வு நிலை குறித்து விவாதித்து, மனுக்களுக்கு உரிய நேரத்தில் தீர்வு காண அறிவுறுத்தினார்.
மேலும், ஜூலை 23 அன்று, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து, ஜூலை 24 அன்று, அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, முதலமைச்சருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவரது உடல்நிலை நலமாக இருப்பதாகவும், இரண்டு நாட்களில் வழக்கமான பணிகளை மீண்டும் தொடங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.