தலைமை காஜி மறைவு…விஜய் முதல் இபிஎஸ் வரை இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Salahuddin Mohammed Ayyub Sahib

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். இஸ்லாமிய அறிஞரான இவர், தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர்.

எனவே,இவருடைய மறைவு என்பது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது. இவருடைய மறைவுக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். எந்தெந்த அரசியல் தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ” தமிழ்நாடு அரசின் தலைமை காஜி திரு.சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

விஜய்

த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய தலைமை அலுவலகம் எனத் தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர்.

அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் தனது இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ் சமுதாயத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பல்வேறு சேவைகள் செய்த பேரறிஞருமான, உயர்திரு. சலாஹுத்தீன் அயூப் அவர்கள் மறைவுற்றார்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தலைமை காஜி உயர்திரு.சலாஹுத்தீன் அயூப் அவர்களின் மறைவு இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரது தொண்டினை நினைவுகூர்கின்ற இவ்வேளையில், அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். மேலும் அன்னாரது குடும்பத்திற்கும், இஸ்லாமிய சகோதரர் , சகோதரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” தலைமை காஜி டாக்டர் சலாவுதீன் முகமது அயூப் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் மற்றும் இரக்கமுள்ள தலைவர். அவரது குடும்பத்தினருக்கும் பின்பற்றுபவர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா

த.வெ. க.தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “தமிழக அரசின் தலைமை காஜி திரு. சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்கள் காலமான செய்தி கேட்டு வருத்தமுற்றேன். சிறந்த சமய கல்வி அறிஞராக, இஸ்லாமிய மக்களுக்கு தேவையான தொடர் அறிவுக் கொடைகளில் ஈடுபட்டு வந்தவர்.

மதிப்புமிக்க சமயத் தலைவராக, சமூக நல்லுறவு, அனைத்து மக்களிடமும் இணக்கமான நட்புறவு கொண்ட சமூக நிலையை நிலைநாட்டியவர். அதற்காக, தமது முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர். தமிழகத்தின் நல்லிணக்க சமூகச் சூழலில் அவர் ஆற்றிய சேவைகள் காலத்திற்கும் போற்றப்படும். காஜி திரு. சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்களை இழந்து வாடும் இஸ்லாமியச் சமூக மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

செல்வப்பெருந்தகை

தமிழக பாஜக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” தமிழ்நாடு அரசின் இஸ்லாமிய தலைமை காஜி திரு சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் ( வயது 84) அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியீட்டு அதில் ” தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகச் செயலாற்றிவரும் சமூகநல்லிணக்கத்தைப் பேணியவருமான முனைவர் சலாஹுதீன் முஹம்மது அய்யூப் (84) அவர்கள் காலமானார் என்பது மிகுந்த துயரமளிக்கிறது. சென்னை புதுக் கல்லூரியில் அரபுமொழித் துறையின் பேராசிரியராக பணியாற்றியவர். கர்நாடக நவாப் அரசவையில் திவானாக பணியாற்றிய குடும்பத்தின் வாரிசு என்ற பெருமைக்குரியவர்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என கூறியுள்ளார்.

சசிகலா

சசிகலா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்னாரது பரந்த அறிவு, நிபுணத்துவம் மற்றும் சமூக சேவை மீதான அவரது ஆர்வம் ஈடு இணையில்லாதது. தமிழ்நாட்டு மக்களின் மதிப்பையும், மரியாதையையும் பெற்றுள்ள தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதால் அவருடைய குடும்பத்தினருக்கும், இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மதிப்பிற்குரிய திரு. சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அரபு மொழி இலக்கியத்தில் PhD பட்டம் பெற்று, தனது வாழ்நாள் முழுவதையும் இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவே வாழ்ந்த அவரின் இழப்பு, அவர் மீது பேரன்பு வைத்துள்ள இஸ்லாமிய மக்கள் உட்பட அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் மனம் வருந்தும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்