தோனிக்கு இதுதான் கடைசி போட்டி…பண்டிகை மாதிரி கொண்டாடுங்க! வேண்டுகோள் வைத்த முகமது கைஃப்!
குஜராத்திற்கு எதிராக நடைபெறவுள்ள போட்டி தான் தோனிக்கு கடைசி போட்டி என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது. இன்று தனது கடைசி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டு மொத்தமாக தனது நடப்பாண்டு போட்டிகளை முடிகிறது. எனவே, சென்னை விளையாடும் கடைசி போட்டி என்பதால் இன்று சென்னை ரசிகர்கள் அதிகமானோர் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் இது சென்னை அணிக்கு கடைசி போட்டியாக இருப்பதை போல தோனிக்கும் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்குமோ? என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்துகொண்டு இருக்கிறது. 43 வயதாகும் தோனி இன்னும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டு இருக்கிறார். எனவே, இந்த சீசன் முடியும் போது அவர் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கிறது.
மற்றொரு பக்கம் இன்னொரு முறை சென்னை அணி கோப்பையை வென்ற பிறகு தான் தோனி ஓய்வு பெறுவார் என கூறி வருகிறார்கள். இந்த சூழலில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டனும், பிரபல வீரருமான எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இது இருக்கலாம் என்று கூறி இந்த போட்டியை ரசிகர்கள் பண்டிகை போல கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” குஜராத் டைட்டன்ஸ் (GT) எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) போட்டி எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் ஆட்டமாக இருக்கலாம், எனவே ரசிகர்கள் மஞ்சள் நிறத்தில் மைதானத்தை நிரப்பி, இந்தப் போட்டியை பண்டிகை போல கொண்டாட வேண்டும்.
அவர் மைதானத்திற்கு வரும்போது மஞ்சள் நிற உடையை அணிந்து அவருக்கு அன்பை செலுத்துங்கள். அவர் தனது கடைசிப் போட்டியை வெல்ல வேண்டும் என்றும் நினைப்பார்” எனவும் தெரிவித்துள்ளார். இவர் கூறியுள்ளதை பார்த்த ரசிகர்கள் தோனிக்கு இது தான் கடைசி போட்டியா? எனவும் ஓய்வை அறிவிக்கப்போகிறாரா எனவும் கேள்விகளளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.