கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

School

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய நிலையில், முழு ஆண்டு தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால், மாதவிடாய் காரணத்தை காட்டி, அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வகுப்பறையை பூட்டிவிட்டு, வெளியே குறிப்பாக படிக்கட்டில் அமர வைத்து தேர்வு எழுதுமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மாணவியின் தாயால் செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மாணவியின் தாய், பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தனது மகளை வகுப்பறையில் தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக உறுதியளித்த பள்ளி நிர்வாகம், அதற்கு மாறாக வெளியில் அமர வைத்து அவமானப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார்கள் எழுந்த நிலையில், பள்ளியில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்