கொரோனோ நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழகத்திற்க்கு மேலும் 4000 கோடி ஒதுக்க முதல்வர் பிரதமருக்கு கடிதம்…

கொரோனோ தடுப்பு நடவடிக்கை குறித்து பாரத பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் நோய் கிருமி தொற்றில் இருந்து இந்தியாவையும், இந்தியர்களையும் காப்பாற்றும் நோக்கில் நீங்கள் தைரியமான மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகிறீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு இயந்திரம் முழுமையாக களமிறக்கப்பட்டு, தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றை தடுப்பதில் தீர்க்கமான முடிவுடன் மத்திய அரசுடன் தமிழக அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், இங்கு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அறைகள், வென்டிலேட்டர்கள், தற்காப்பு கவசங்கள் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த ஏற்கனவே தாங்கள் ஒதுக்கிய ரூ.15 ஆயிரம் கோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழகத்தில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த, நானும் சில தொகுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளேன். மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குசிகிச்சை அளிக்க, 10 ஆயிரம் படுக்கைகள் கொண்டதனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைஅறைகள் தயாராக உள்ளன. மேலும், மருந்துகளை அதிகளவில் கொள்முதல் செய்யவும் மற்றும் மருத்துவ பணியாளர்களை பணியமர்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.இதனால், தமிழகத்துக்கு கூடுதல் நிதிஆதாரங்கள் தேவைப்படுகிறது. ஏற்கெனவே மாநில பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 நாட்கள் தடை என்பது மேலும், மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும். நான் ஏற்கெனவே, வேலையிழந்துள்ள குடும்பங்களுக்காக மார்ச் 31-ம் தேதியை கணக்கிட்டு ரூ.1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க ரூ.3,280 கோடிக்கான உடனடி நிவாரண தொகுப்பை அறிவித்துள்ளேன். இந்நிலையில், தற்போது கூடுதலாக 2 வாரங்கள் தடையுத்தரவு வந்துள்ளதால், தினக்கூலி ஏழை மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் போதிய உதவிகள் இன்றி சரிவடையும். எனவே இதுதொடர்பான பொருளாதாரம் மற்றும் நிதியுதவி தொகுப்புகளை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கிறோம். இந்த நிலையில், சில சிறப்பு நிவாரண தொகுப்புகளை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.எனவே, இந்த தொற்று நோய் பாதிப்பு சவாலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்துக்கு ரூ.4000 கோடியை சிறப்பு நிதியாக உடனடியாக ஒதுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.