இன்றுடன் முடிகிறது அமலாக்கத்துறை காவல்! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் செந்தில் பாலாஜி!

SENTHIL BALAJI

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 7-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும். கைது சட்டவிரோதம் இல்லை. கைது செய்ய அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது என நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

மேலும், செந்தில் பாலாஜியை வரும் 12ம் தேதி வரை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அன்றைய தினமே அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாத்துறையின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 நாள் அமலாக்கத்துறை காவல் விதித்து, மீண்டும் 12-ஆம் தேதி செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி ஆணையிட்டார். இதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அன்றை தினமே இரவு புழல் சிறையில் இருந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று செந்தில் பாலாஜியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டிருந்தது.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் விசாரணை அறைக்கு வெளியே மருத்துவர்கள் இருப்பதாவும் கூறப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த 200க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை தயார் செய்து, அதன்படி கேட்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த 7-ஆம் தேதி இரவு முதல் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. எனவே விசாரணைக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் 5 நாள் காவல் இன்றுடன் முடிவதால், செந்தில் பாலாஜியை இன்று மாலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்ட பின், மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

ஆனால், எதிர்பார்த்த கேள்விகளுக்கு அவரிடம் பதில்கள் வரவில்லை என்றால், அவருடைய காவலை நீட்டிக்க அமலாக்கத்துறை முறையிடவும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை, அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்