மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் – கடல் உணவு ஏற்றுமதி சங்கம் அறிவுரை.!
மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என கடல் உணவு ஏற்றுமதி சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மீன்பிடி விசைப் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் ஆகியவை அனைத்தும் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ் நாட்டின், கிழக்கு கடற்கரைப்பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என்றும் மேற்கு கடற்கரைப் பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜூன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என கடல் உணவு ஏற்றுமதி சங்கம் அறிவித்துள்ளது. ஜப்பான் தவிர மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலையுள்ளதால் கடல் உணவு ஏற்றுமதி சங்கம் அறிவுரை வழங்கியுள்ளது. 12 மணி நேரம் மீன் பிடித்தால் இறால்கள் தரம் மேம்பாட்டுடன் இருக்கும் என்பதால் மீனவ சங்கங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.