அரசு பணியிடங்கள்! முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கும் அறிவிப்புக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்களுக்கும், அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, அமைச்சர் (நிதி, மனிதவள மேலாண்மை) அவர்களால், வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், பெற்றோர்களை இழந்த இளைஞர்கள் மற்றும் அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.
