“வீடில்லாதவர்களுக்கு வீடு;சாத்தியமானவைகளை உள்ளடக்கிய பட்ஜெட்” -ஓபிஎஸ் வரவேற்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை,சாத்தியமானவைகளை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தினை அதிமுக சார்பில் வரவேற்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
அதிமுக சார்பில் வரவேற்பு:
“மத்திய நிதி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தினை அதிமுக சார்பில் வரவேற்கிறேன்.தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாடெங்கும் பரவியுள்ள கொரோனா தொற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்பான நடவடிக்கைகளை படம் பிடித்துக் காட்டுதல்:
இந்திய நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.2 விழுக்காடாக இருக்கும் என்றும்,ழக்கமாக மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிதி அல்லாமல்,இந்த நிதி 50 ஆண்டு கால வட்டியில்லாக் கடனாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது,அனைத்துத் துறைகளும் வளர்ச்சி பெறும் வகையில் மத்திய அரசினால் எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கைகளை படம் பிடித்துக் காட்டுகிறது.
வீடில்லாத ஏழையெளிய மக்களுக்கு வீடுகள்:
மேலும்,அனைவருக்கும் இல்லம் என்பதன் அடிப்படையில், 80 இலட்சம் வீடுகள் கட்ட 48,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இது நிச்சயம் வீடில்லாத ஏழையெளிய மக்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகுக்கும்.
இதேபோன்று,3.8 கோடி மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு 60,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு,வருமான வரி தாக்கல் செய்தபின் மேம்படுத்தப்பட்ட வருமானவரி தாக்கல் (Updated Return) செய்ய அனுமதி,மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 14 விழுக்காடு வரிச் சலுகை,தொடக்க நிறுவனங்களுக்கு (Start-ups) ஊக்கத் தொகை போன்ற திட்டங்கள் இளம் தொழில் முனைவோர்களை பெரிதும் ஊக்கப்படுத்தும்.
காவேரி உள்ளிட்ட ஐந்து நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கான வரைவு:
கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணையாறு பெண்ணையாறு மற்றும் காவேரி உள்ளிட்ட ஐந்து நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கான வரைவு விரிவு திட்ட அறிக்கைகள் முடிக்கப்பட்டுவிட்டன என்று அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
அதுமட்டுமல்லாமல்,வேளாண் வளர்ச்சி மற்றும் வேளாண் நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான அனைத்து துறைகளும் மத்திய அரசால் இந்த நிதிநிலை அறிக்கையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இந்த நிதிநிலை அறிக்கை சாத்தியமானவைகளை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையினை மக்களிடையே உருவாக்கும் என நான் நம்புகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை. #Budget2022 pic.twitter.com/kBSV0eYYEU
— AIADMK (@AIADMKOfficial) February 2, 2022