உயிர் தான் முக்கியமே தவிர.. வருமானம் அல்ல..உயர்நீதிமன்றம் காட்டம் .!

மக்களின் உயிரை விட வருவாய் முக்கியமானதா..? அமைதி, சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டால் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டிருக்காது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம் .
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு டாஸ்மாக் இயங்க அனுமதிகொடுத்ததன் மூலம் தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி கொடுத்தது. ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது.
நிபந்தனைகளை மீறியதால் மதுக்கடைகளை மூட அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, மீதம் இருந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில்,உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த மனு இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், மதுக்கடைகளை திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள் இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தன.
காணொளி மூலம் நடந்த இந்த விசாரணையில், மக்கள் தங்களின் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றி கொள்ளாமல், மதுபான கடைகளுக்கு செலவழிப்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
கூட்டத்தை கட்டுப்படுத்த நாள் ஒன்றுக்கு 500 டோக்கன் நடைமுறையை பின்பற்ற உள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது பேசிய தலைமை நீதிபதி, மக்களின் உயிரை விட வருவாய் முக்கியமானதா..? அமைதி, சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டால் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டிருக்காது. அரசியல் சாசன விதிகளை அமல்படுத்தும் கடமை நீதிமன்றங்களுக்கு உள்ளது என தலைமை நீதிபதி காட்டாக கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.