ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவானது கோவை ஈஷா யோகா மையம் சார்பாக வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை முன்பு மிக பிரமாண்டமாக நடைபெறும். அதே போல வரும் புதன் கிழமை (பிப்ரவரி 26) மாலை 6 மணிக்கு இந்த வருட சிவராத்திரி விழா தொடங்கி மறுநாள் (பிப்ரவரி 27) காலை 6 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது. இங்கு ஆன்மீக இசை நிகழ்வுகள் விடிய விடிய நடைபெறும்.
இந்நிலையில், வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதால் வன சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படும். அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் வன்சுற்றுசூலையும், விவசாய நிலங்ளையும் அதிகமாக பாதிக்கிறது என கூறி ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த எஸ்.டி.சிவஞானன் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு, எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் யோகேஸ்வரன் , ஈஷா யோகா மையம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள் பின்பற்றுவதில்லை எனக் கூறி தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இது தொடராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறிய தகவலின்படி, கழிவுநீர் மேலாண்மை மற்றும ஒலிமாசுவை கட்டுப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.