அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, டிஎஸ்பி சுந்தரேசனுக்கு அரசு வழங்கிய பொலிரோ வாகனம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திரும்பப் பெறப்பட்டதாகவும், இதனால் அவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆனால், மாவட்ட காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்து, வாகனம் பழுது காரணமாக எடுக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக மாற்று வாகனம் வழங்கப்பட்டதாகவும் விளக்கமளித்தது. ஆனால், சுந்தரேசன் இதை மறுத்து, உயர் அதிகாரிகளின் அழுத்தம் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கையாக இது நடந்ததாக குற்றம்சாட்டினார்.
சுந்தரேசனின் இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் ஊடகங்களில் பேசியது, காவல்துறை ஒழுங்கு விதிகளை மீறியதாக கருதப்பட்டது. இந்த நிலையில், தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, சுந்தரேசனை தற்காலிக பணிநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும், அவர் மீது 3(a), 3(b) பிரிவுகளின் கீழ் நான்கு மெமோக்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும், இவை காவல்துறை விதிகளை மீறிய செயல்களுடன் தொடர்புடையவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025