இனி ஒரு உயிர்கூட போகக்கூடாது…போர்க்கால அடிப்படையில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் – சீமான்

Default Image

போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும் என சீமான் அறிக்கை வெளியீடு.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகவேகமாகப் பரவிவரும் கொடுஞ்சூழலில் வடமாநிலங்களில் நிகழ்வதுபோல, தமிழகத்திலும் உயிர்க்காற்றான ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழந்து வரும் செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன்.

நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகளும், நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகளும் உயிர்க்காற்றின்றி மரணித்த செய்தியானது பெரும் அச்சத்தையும், கவலையையும் தருகிறது. இனியும் இதுபோல அரசின் அலட்சியத்தால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

ஆகவே, பேரிடர் சூழலை மனதில்கொண்டு உயிர்க்காற்றுடன்கூடிய படுக்கை வசதியை நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு உறுதிப்படுத்த வேண்டியது அரசின் தலையாயக்கடமையாகும்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்துச் செயல்பட்டு, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் கொரோனோ தொற்று நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்ற மருந்துகள், படுக்கைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.

தமிழகத்தில் இனி ஒரே ஒரு உயிர்கூடப் போதிய மருத்துவ வசதிப் பற்றாக்குறையால் பறிபோகா வண்ணம் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்