இதை செய்தால் மட்டுமே நீட் போன்ற கொடூரமான தேர்வை அகற்ற முடியும் – முதலமைச்சர்

சென்னை கோட்டை கொத்தளத்தில் நாட்டின் 77-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்று 3வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய முதலமைச்சர் திமுக அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது, புதிய திட்டங்கள் மற்றும் ஒரு சில அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
இதில் குறிப்பாக பேசிய முதல்வர், மக்களிடம் நேரடி தொடர்பு கொண்ட அனைத்தும், மாநில பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற முடியும் என தெரிவித்தார். இதனிடையே பேசிய முதல்வர், எட்டுக் கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் பயனடையும் ஆட்சியை நமது அரசு வழங்கி வருகிறது.
கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் ஆகிய அனைத்து வகையிலும் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் வழங்கி வருகிறது. எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் சமூகநீதி நிர்வாக ஆட்சிமுறை இந்தியா முழுவதும் பரவினால் அதைவிட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது.
மாநிலங்கள் ஒன்றிணைந்த நம் இந்திய நாடு பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாடு கொண்ட மக்கள் அனைவரது வளர்ச்சியையும் கொண்டதாக வளர வேண்டும். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்டோர் நலன் ஆகிய மிக உயர்ந்த கோட்பாடுகள் கொண்ட இந்தியாவை அமைப்பது தான் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றுள்ளார்.