சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!
2024 கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். 3 நாள் அரசு முறை பயணமாக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பெங்களுருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகை தந்துள்ளார். தமிழம் வந்துள்ள பிரதமர் மோடியை, அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, ஐ.பெரியசாமி, எவே வேலு ஆகியோர் வரவேற்றனர்.
திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பாஜகவின் முக்கிய தலைவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர்களும் வரவேற்றனர்.
கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ…
இதன்பின் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு மைதானத்துக்கு செல்கிறார் பிரதமர் மோடி.
எனவே, சற்று நேரத்தில் நேரு விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார் பிரதமர் மோடி. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 5,630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் இன்று முதல் ஜன. 31ம் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.