சிறுமி பாலியல் வழக்கு : குற்றவாளியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை.!
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி குறித்து தகவல் தெரவிக்க காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளியை விரைவில் கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். குற்றவாளியை கைது செய்ய, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் தகவல்களின் அடிப்படையில், குற்றவாளி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகியும், இன்னும் குற்றவாளியை போலீசாரால் கைது செய்யமுடியவில்லை. இந்நிலையில், குற்றவாளியின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட்டு, அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி, குற்றவாளி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தமிழக-ஆந்திர எல்லையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று முன் தினம் வீடு திரும்பினார்.