“பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க வீரர் பூலித்தேவர் புகழ் என்றென்றும் ஓங்குக! – முதல்வர் ஸ்டாலின்…!

மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் துணிவையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றிடுவோம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டின் சுதந்திர வரலாற்றில் “வெள்ளையனே வெளியேறு” என்று முதலில் முழங்கிய பூலித்தேவரின் 306 வது பிறந்த நாளான இன்று பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் பூலித்தேவரின் 306 வது பிறந்த நாளை நினைவு கூர்ந்து,மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் துணிவையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் கூறியிருப்பதாவது:
“ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதல் விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்தநாளான இன்று (1.9.2021) அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்வதில் பெருமிதம் அடைகிறேன்.
விடுதலைக்கான வேட்கை தமிழ்நாட்டிலிருந்துதான் முதலில் கிளம்பிற்று என்பதற்கு பூலித்தேவரின் விடுதலை போராட்டமே ஆதாரமாக விளங்குகிறது.
இன்றைக்கு நாட்டிற்கு எத்தகையை இடையூறுகள் எந்த திசையில் இருந்து வந்தாலும், நாம் நாட்டின் பக்கம் உறுதியுடன் நின்று, தேசப்பற்றை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றால் மாவீரர் பூலித்தேவர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் காட்டிய வழிதான்!
விடுதலை வீரர் பூலித்தேவரால் நெற்கட்டும்செவல் – மட்டுமல்ல- இந்த நாடே பெருமையடைகிறது தமிழ்நாடு.பூலித்தேவரின் தேசப்பற்றை நமது நெஞ்சில் ஏந்தி, இந்த நாட்டு ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் தொடர்ந்து பணியாற்றுவோம்!
மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் துணிவையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றிடுவோம்! தமிழ்நாட்டின் தன்மானச் சுடரொளியை என்றென்றும் உயர்த்திப் பிடித்திடுவோம்”,என்று தெரிவித்துள்ளார்.