காயத்தால் மைதானத்திலிருந்து வெளியேறிய ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதி.!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார்.

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் நாளில் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் விளையாட முயன்ற போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. மைதானத்தில் வலியால் துடித்த அவரை மருத்துவக் குழு பேட்டரி கார் மூலம் அழைத்து சென்றது.
இதை தொடர்ந்து ஸ்கேன், பிற பரிசோதனைக்காக மருத்துவமனையில் பண்ட் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக இந்தத் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், ரிஷப் பண்ட்டின் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. பண்டின் காயம் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக, ரிஷப் பண்ட் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது (லண்டன் லார்ட்ஸ் மைதானம்) ஏற்கனவே இடது கை விரலில் காயமடைந்திருந்தார், இதன் காரணமாக அவர் 34 ஓவர்களுக்கு பிறகு விக்கெட் கீப்பிங் செய்யாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். அந்தப் போட்டியில் துருவ் ஜுரேல் மாற்று விக்கெட் கீப்பராக பொறுப்பேற்றார்.
இருப்பினும், பண்ட் அந்தப் போட்டியில் வலியுடன் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 74 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 9 ரன்களும் எடுத்திருந்தார். அதேபோல் இப்பொது, நான்காவது டெஸ்ட் போட்டியில் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாமல் போனால், துருவ் ஜுரேல் மீண்டும் விக்கெட் கீப்பராக இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், பண்ட் இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என முன்பு உறுதிப்படுத்தியிருந்தார், ஆனால் காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து அவர் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடலாம் அல்லது ஓய்வு எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.