#BREAKING: அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் பறிமுதல்?- வெளியான தகவல்!

அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து ரூ.70 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்.
அமலாக்கத்துறை சோதனையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்ற பணம் குறித்து அமைச்சர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லுரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் இன்று காலை 7 முதல் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
விழுப்புரத்தில் பதியப்பட்டுள்ள வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2006-2011 வரை அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறையில் அதிக அளவு செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.