SanatanaDharma : என் தலையை சீவ 10 கோடியா.? 10 ரூபா சீப்பு போதும்.! சாமியாருக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி.!

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
அவர் மீது வடமாநிலங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் கோரிக்கையும் பாஜக தரப்பில் இருந்துவலுத்து வருகின்றன. இந்நிலையில் , உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் நேற்று, சனாதன கொள்கைக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்து அதிர வைத்தார்.
இந்த சாமியார் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் இது பற்றி கலகலப்பாக பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், என்னுடைய தலையை சீவ ஒரு சாமியார் 10 கோடி தருகிறேன் என கூறுகிறார். 10 ரூபாய் சீப்பு போதும் என் தலையை நானே சீவிக்கொள்வேன் என பரபரப்பாக பேசப்பட்ட அந்த சாமியார் கருத்துக்கு நகைச்சுவையாக தனது பதிலடியை கொடுத்துள்ளார்.
மேலும், நான் அப்போதே மேடையில் சொன்னது நடந்துருச்சி. சனாதனம் பற்றி பேசியதும் என்மீது விமர்சனங்கள் விழும் என தெரியும். தற்போது இந்தியா முழுக்க என்னைப்பற்றி தான் பேசுகிறார்கள். இந்தியா முழுக்க என் மீது புகார்கள் குவிகின்றன. என்னுடைய தலைக்கு 10 கோடி ஒரு சாமியார் கூறுகிறார். சாமியாருக்கு எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது.? என கேள்வி ஏழுப்பினார்.
பெரியார், அண்ணா, கலைஞர் , தற்போது நம்முடைய தலைவர் என அனைவரும் சனாதன கொள்கையை எதிர்த்தவர்கள் தான். அதனை இன்னும் எதிர்ப்போம். நான் பேசுவதை திருத்தி பேசுகிறார்கள் சனாதனம் என்றால், யாரும் கேள்வி கேட்க கூடாது, அந்த விதிகளில் எந்தவித மாற்றமும் செய்ய கூடாது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பெண்கள் பயில கூடாது என்கிறது சனாதன தர்மம். பாஜக தான் இந்து விரோத கட்சி என கூறுகிறார்கள். மணிப்பூரில் இனப்படுகொலை செய்து கொண்டு இருப்பது பாஜக தான். மணிப்பூரில் தொலைக்காட்சிக்கு அனுமதி இல்லை. உண்மையான இனப்படுகொலை செய்து கொண்டு இருப்பது பாஜக தான் என பல்வேறு விமர்சனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்து பேசினார்..