பெருமாளை கும்பிட இரவு நேரத்தில் ஸ்டாலின் கோவிலுக்கு செல்வார் போல் தெரிகிறது -அமைச்சர் செல்லூர் ராஜூ

ஸ்டாலின் பெருமாளை கும்பிடுவது இதுவரை தெரியவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரியிலுள்ள வானுமாமலை பெருமாள் கோயிலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்றார்.அங்கு அவரிடம் மூதாட்டி ஒருவர், ஸ்டாலின் பெருமாள் கோயிலுக்கு வருவாரா?’’ எனக் கேள்வி கேட்டார்.இதற்கு பதில் அளித்த துர்கா ஸ்டாலின் , பெருமாள் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை உள்ளது எனவும் கோவில்களுக்கு எல்லாம் வருவார் எனவும் பதிலளித்தார்.இது பெரும் விவாதமாக மாறியுள்ளது.
இந்நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஸ்டாலின் பெருமாளை கும்பிடுவது இதுவரை தெரியவில்லை.பெருமாளை கும்பிட இரவு நேரத்தில் ஸ்டாலின் கோவிலுக்கு செல்வார் என்று தெரிகிறது.இதனை சிறுபான்மையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.தேர்தல் என்றால் எப்படி எல்லாம் வேஷம் போடுகிறார்கள்.தமிழக மக்கள் ஒன்றும் அவ்வளவு ஏமாளி இல்லை என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,குறைகள் சொல்ல வேண்டும் என்றால் ஆட்சித் தலைவர் அலுவலகம்,தாலுகா அலுவலகம் உள்ளிட்டவை உள்ளது.எதிர்கட்சித் தலைவர் ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார்.ஏற்கனவே ஊர் ஊராக சென்று ,எதனை நிறைவேற்றி இருக்கிறார்.100 நாட்களில் எதை நிறைவேற்ற முடியும் ? வாங்கி இருக்கிற மனுக்களை பார்ப்பதற்கே ஒரு மாதம் ஆகிவிடும்.மனுக்களை பிரித்து எந்தெந்த துறைக்கு அனுப்பனும் ,என்னென்ன வகையான மனு வந்திருக்கு ,அப்படி பிரிப்பதற்கே ஒரு மாதமாகிவிடும்.உடனே எதுவும் செய்ய முடியாது.நடக்கக்கூடியதை ஸ்டாலின் பேசுகிறாரா ? அது தவறு.எம்ஜிஆர் சொன்னார் திமுக ஒரு தீய சக்தி, அதிமுக அதை ஒழிக்கும் வரை ஓயாது என்று கூறியதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.