‘இன்பம் பெருகும் துன்பம் முடியும்’ – புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘இன்பம் பெருகும் துன்பம் முடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்த புத்தாண்டில் ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும். நாட்டில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திட வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே மிரட்டி வரும் கொடிய வைரஸ் தொற்றான கொரோனாவும், தற்போது வேகமாக பரவி வரும் ஓமிக்ரானும் 2022ல் நம்மை விட்டு விலகி அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு இணையாக எந்த நோய்களும் அண்டாமல் மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும். இந்த ஆங்கில புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
2022 ஆங்கில புத்தாண்டு, அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.#HappyNewYear2022 pic.twitter.com/riVLySxMTa
— Vijayakant (@iVijayakant) December 31, 2021