‘பாஜகவுடன் கூட்டணி இல்லை’… நமது அம்மா நாளிதழின் மேலாளர் பணிநீக்கம்!

தமிழகத்தில் பாஜக – அதிமுக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக கட்சி அங்கும் வகிக்கிறது என்று கூறப்பட்டாலும், அண்ணாமலை – அதிமுக இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மறைந்த முன்னாள் தலைவர்கள் குறித்து அண்ணாமலை பேசும் கருத்துக்கள் அதிமுகவினர் இடையே கண்டங்களை எழுப்பியுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா குறித்த பேச்சுக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டி அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது பேரறிஞர் அண்ணா குறித்த பேச்சுக்கு அண்ணாமலைக்கு அதிமுகவினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அதிமுக – பாஜக இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவில் கூட்டணி தொடர்வதா அல்லது முறிப்பதா என்பது குறித்து முடடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
அதிமுக கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பதில் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கடந்த வாரம் அதிமுக – பாஜக கூட்டணி தற்போது இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சரும், அதிமுக முக்கிய நிர்வாகியுமான ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.
பாஜக கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி, ஜெயக்குமார் பேட்டியளித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அண்ணாமலை தான் அதிமுக தலைவர்களை பற்றி விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, கூட்டணி குறித்து பேசக்கூடாது என அதிமுகவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியை தலைப்புச் செய்தியாக அச்சிட்ட காரணத்தால் நமது அம்மா நாளிதழின் மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியை விட்டு வெளியேற விரும்பாத முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!
July 21, 2025