கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!
கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (101) உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

திருவனந்தபுரம்: முன்னாள் முதலமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.அவருக்கு 101 வயது. மாரடைப்பால் கடந்த ஜூன் 23 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வி.எஸ். அச்சுதானந்தன் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது.
இப்படியான சூழலில், இன்று பிற்பகல் 3.20 மணிக்கு அவர் காலமானார். ஆரம்பகால கம்யூனிஸ்ட் தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் 1923 அக்டோபரில் ஆலப்புழாவில் பிறந்தார். குட்டநாட்டில் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை வி.எஸ். ஒழுங்கமைத்து வழிநடத்தி, சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து, அங்கிருந்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
1946 இல் நடைபெற்ற புன்னப்ரா-வயலார் போராட்டத்தில் முன்னணிப் போராளியாக இருந்தார். அதன்பிறகு, 1964 ஆம் ஆண்டு சிபிஎம் பிறப்பதற்கு வழிவகுத்த சிபிஐயின் ஏற்ற தாழ்வுகளிலும் விஎஸ் உடனிருந்தார். சிபிஎம் மாநில செயலாளர், பொலிட்பீரோ உறுப்பினர், தேசாபிமானி செய்தித்தாள் மற்றும் சிந்தா வார இதழின் தலைமை ஆசிரியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை அவர் வகித்தார்.
2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக இருந்தார். 2016 ஆம் ஆண்டு பினராயி விஜயன் முதலமைச்சரானபோது, அவருக்கு நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவருடைய மறைவு என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.