காவிரி விவகாரம் : தேசிய கொடியுடன் போராடிய பி.ஆர்.பாண்டியன் கைது.! கண்டனம் தெரிவித்த இபிஎஸ்.!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுக்குகளுக்கு இடையேயான பிரச்சனை, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் என நீண்டு கொண்டு செல்கிறது. உரிய அளவிலான தண்ணீரை தரவில்லை என தமிழக அரசும், போதிய அளவு தண்ணீர் இல்லை என கர்நாடக அரசும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த காவிரி விவகாரம் தொடர்பாக முறையாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அவ்வப்போது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதே போல தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கூடாது என கர்நாடக மாநிலத்திலும் போராட்டம், முழு அடைப்பு என நடைபெற்று, நடைபெற உள்ளது.
இன்று காலை சென்னை மெரினாவில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கையில் தேசிய கொடியுடன் போராட்டம் நடத்த முற்பட்டார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் , மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்பதால் பி.ஆர்.பாண்டியனை கைது செய்து குண்டுக்கட்டாக காவல்துறையினர் தூக்கி சென்றனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது X சமூக வலைத்தளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்னெத்தும், தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் இன்று சென்னை மெரினா சாலையில் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் அவர்களின் மீது தாக்குதல் நடத்தியும் வலுக்கட்டாயப்படுத்தியும் கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவிமடுக்க மறுக்கும் இந்த அரசு இருந்தென்ன இல்லை என்றால் என்ன? தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து வரும் விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாள்வதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாது என இந்த அரசை மீண்டும் ஒரு முறை கண்டிப்பதுடன், இனியும் விவசாய சங்கங்கள் மீது இத்தகைய அடக்குமுறையை கையாண்டால் இந்த அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.