இளையராஜா VS என் பெயர் பாக்கும்போது பெருமையா இருக்கு…நடிகை வனிதா வேதனை!
எனது மகள் ஜோவிகா, சோனி நிறுவனத்திடம் முறையாக ஒப்பந்தம் செய்து, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த உரிமம் பெற்றிருந்தார் என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’ பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தப் பாடல், 1982-ல் வெளியான ‘ராசாவே உன்னை நம்பினேன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்தது. இந்த வழக்கு, பாடல் உரிமை தொடர்பான சர்ச்சைகளில் இளையராஜா தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது
இளையராஜாவின் குற்றச்சாட்டு, ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகும். ‘ராத்திரி சிவராத்திரி’ பாடலைப் பயன்படுத்துவதற்கு முன், படத் தயாரிப்புக் குழு தன்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று இளையராஜா மனுவில் குறிப்பிட்டியிருந்தார்.
இந்நிலையில், தற்போது நடிகை வனிதா, இளையராஜாவின் இசையை தனது படத்தில் பயன்படுத்தியது குறித்து விளக்கமளித்தார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது “ இளையராஜா VS வனிதா என்பதை பார்த்து பெருமைபடவா அல்லது வருத்தப்படவா என தெரியவில்லை. இளையராஜா இசையில் பெரிய ஞானி அவருடைய பெயருக்கு பக்கத்தில் என்னுடைய பெயர் VS போட்டு வருகிறது என்றால் நிச்சயமாக எனக்கு பெருமை தான்” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் “எனது மகள் ஜோவிகா, சோனி நிறுவனத்திடம் முறையாக ஒப்பந்தம் செய்து, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த உரிமம் பெற்றிருந்தார். எல்லாம் சட்டப்படி நடந்தது. இதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அவர் சோனி நிறுவனத்தை அணுகியிருக்க வேண்டும், என்னை இழுக்க வேண்டிய அவசியமில்லை,” என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் “இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தனது படத்தில் நன்றி கார்டு வைத்ததாகவும், ஆனால் அதையே பயன்படுத்தி அவர் தன்னிடம் பணம் கோரியதாகவும் வனிதா குற்றம்சாட்டினார். இதனால், அந்த கார்டை தனது படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். வனிதாவின் ‘Mrs & Mr’ படம் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.
ஆனால் அதில் இளையராஜாவின் பெயர் இடம்பெறவில்லை. “நான் அவரை ஒரு குடும்ப உறுப்பினராகவே பார்த்தேன். அவரது வீட்டில் ஒரு பிள்ளையைப் போல இருந்தவள் நான். ஆனால், இந்த விஷயத்தில் அவர் என்னை திருட்டு செய்தவள் போல நடத்துவது எனக்கு இந்த நேரத்தில் மிகவும் வருத்தமாக இருக்கிறது,” என்று வனிதா உணர்ச்சிவசப்பட்டு கூறினார். இளையராஜாவின் மீது தனக்கு இன்னும் மரியாதை இருப்பதாகவும், ஆனால் அவரது இந்த நடவடிக்கை தனது நம்பிக்கையை உடைத்துவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். “நான் அவருக்கு நன்றி சொன்னதற்காகவே பணம் கேட்கிறார். இது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
இளையராஜா தன்மீது தொடர்ந்த வழக்கு காரணமாக, அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக வனிதா தெரிவித்தார். “அந்த வழக்கு தொடர்ந்த பிறகு, நான் அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் ஒரு பிரஸ் மீட்டிங்கில் கோபப்பட்டதற்கு காரணம், அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை உடைந்ததுதான்,” என்றும் குறிப்பிட்டு மனதிற்குள் ஏற்பட்டிருக்கும் வேதனையை வெளிப்படுத்தினார்.