#TNAssembly:”மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன்” – ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள்!

சென்னை:மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும் என்ற தகவல் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெறு வருகிறது.தற்போது,ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதன்படி,வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கி ஆளுநர் கூறுகையில்:
“சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில்,சிறந்த முதல்வராக ஸ்டாலின் அவர்கள் தேர்வாகியுள்ளார்.ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே இப்பெயரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பெற்றிருப்பது பெருமைக்குரியது.பெரு மழை காரணமாக ஸ்தம்பித்த சென்னை; அணைகளில் இருந்து சரியான நேரத்தில் அளவான நீரை வெளியேற்றி, இயற்கை சீற்றத்தை சிறப்பாக கையாண்டு முதல்வர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்”,என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய ஆளுநர்:”சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் புத்தக நிலையங்கள் அமைக்கப்படும்.கோயில்களில் தல வரலாறு புத்தகங்களாக வெளியிடப்படும்
- நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கைபடி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகளில் தமிழ் பயன்பாட்டை அரசு உறுதி செய்யும்.
- குடிசைகள் இல்லா தமிழகத்தை ஏற்படுத்துவதே முதல்வரின் கனவாக உள்ளது.வரும் பத்தாண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது.
- தூத்துக்குடியில் 1,100 ஏக்கரில் ஃபர்னிச்சர் பூங்காவை விரைவில் முதல்வர் தொடங்கி வைப்பார்.இதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.தொழிற் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என்ற அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும் என்ற தகவல் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025