மேகதாது அணை விவகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் துரைமுருகன் முக்கிய ஆலோசனை.!

மேகதாது விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தற்போது கர்நாடக மாநில அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்து அம்மாநில துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார் .
இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவேரி நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் தான் இதில் முடிவு எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பேச்சுவார்த்தை நடத்த கூடாது என தெரிவித்து இருந்தார்.
தற்போது, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.