போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் போலீசார் சோதனை..! 45 பேர் சுட்டுக்கொலை..!

பிரேசிலின் மூன்று மாநிலங்களில் போதைப்பொருள் கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய சோதனையில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, ரியோ டி ஜெனிரோவில் உள்ள காம்ப்ளெக்சோ டா பென்ஹா பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காம்ப்ளெக்சோ டா பென்ஹாவில் போதைப்பொருள் கடத்தல் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வடகிழக்கு மாநிலமான பாஹியாவில், ஜூலை 28 முதல் கடந்த திங்கட்கிழமை வரை சால்வடார், இட்டாடிம் மற்றும் காமகாரி ஆகிய மூன்று நகரங்களில் போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் 19 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக, ஜூலை 28 அன்று கடலோர நகரமான குவாருஜாவில் சிறப்புப் படை போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இதன்பிறகு, ‘ஆபரேஷன் ஷீல்ட்’ என்று பெயரில் சாவ் பாலோ மாநிலத்தில் ஐந்து நாள் போலீஸ் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 58 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையில் 400 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் 18 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, காவல்துறையின் நடவடிக்கைகள் மீது பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். அந்த வகையில், குவாருஜாவில் நடந்த நடவடிக்கையை பிரேசிலின் நீதி அமைச்சர் ஃபிளாவியோ டினோ விமர்சித்துள்ளார்.
மேலும், ரியோவில் போலீஸ் சோதனைக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நகரத்தில் இதுபோன்ற 33 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அதில் மொத்தம் 125 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.