டெல்லி அதிகாரிகள் நியமனம் சட்டம் இயற்ற உரிமை உண்டு! மக்களவையில் காரச்சார விவாதம்!

டெல்லியில் மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம், பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரங்களை வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான மசோதா இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி சேவைகள் மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அவசர சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எந்த சட்டத்தையும் கொண்டு வரும் உரிமை அரசுக்கு இருப்பதாக வாதத்தில் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய மசோதா, டெல்லியின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ஆதரவான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது. டெல்லியில் துறைகள் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லி மாநில அரசுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மீறும் வகையில் மத்திய அரசு மசோதாவை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை இன்று மக்களவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார். மக்களவையில் 9 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. டெல்லி அரசு அதிகாரிகள் நியமன சட்டம் தொடர்பாக மக்களவையில் காரச்சார விவாதம் நடைபெற்று வருகிறது.
மசோதா மீதான விவாதத்தில் பேசிய அமித்ஷா, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்தது சச்சரவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. டெல்லி அதிகாரிகள் நியமன சட்டத்தை இயற்றும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது. யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கவும், சட்டம் இயற்றவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது.
ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் மற்றும் அம்பேத்கர் ஆகியோர் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை எதிர்த்தனர். எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தாலும் மீண்டும் மோடி அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதற்காக அர்விந்த் கெஜ்ரிவால் அரசின் ஊழலுக்கு துணை போகிறது.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராக வருவார் என தெரிவித்தார். டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடந்து வரும் நிலையில், இம்மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.