திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!
கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டா (Diogo Jota) ஸ்பெயினின் ஸமோரா நகர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மரணமடைந்தார்.

சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வெறும் 28 வயதுதான். அந்நாட்டு ஊடக அறிக்கையின்படி, அவரது கார் ஸ்பெயினில் விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில், அவரது சகோதரர் ஆண்ட்ரேவும் அவருடன் காரில் இருந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். ஆண்ட்ரேவும் 26 வயது கால்பந்து வீரர் ஆவார். ஜோட்டாவின் திருமணத்திற்கு 10 நாட்களுக்குப் பிறகு இந்த துயர சம்பவம் நடந்தது. அவர் தனது நீண்டகால காதலியான ரூட் கார்டோசோவை 10 நாட்களுக்கு முன்பு போர்டோவில் மணந்தார்.
ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரேவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவின் மறைவால் போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பும் முழு போர்ச்சுகல் கால்பந்து உலகமும் முற்றிலும் அதிர்ச்சியடைந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.
ஜோட்டா சமீபத்தில் நேஷன்ஸ் லீக் கோப்பையை வென்ற போர்ச்சுகல் அணியில் ஒரு பகுதியாக இருந்தார். இறுதிப் போட்டியில் ஸ்பெயினை தோற்கடித்து போர்ச்சுகல் அணி பட்டத்தை வென்றது. லிவர்பூல் கால்பந்து கிளப்புடன் இணைந்து பல பட்டங்களையும் வென்றுள்ளார்.
அவர் லிவர்பூலுக்காக 123 போட்டிகளில் 47 கோல்களை அடித்தார். அவர் லிவர்பூலுடன் நான்கு பட்டங்களை வென்றார். 2020 முதல் அவர் இந்த அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இது தவிர, அவர் போர்ச்சுகலுக்காக 49 போட்டிகளில் 14 கோல்களை அடித்துள்ளார்.