‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!
குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக, எந்தவொரு வங்கியின் சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை அவசியம். இந்த இருப்புத் தொகை பராமரிக்கப்படாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அபராதம் விதிக்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி இப்போது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை விதிக்க முடிவு செய்துள்ளது. PNB சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்படாவிட்டால், எந்த அபராதமும் விதிக்கப்படாது.
ஆம், அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் இப்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காததற்காக ரூ.10 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. இனிமேல், இந்த அபராதம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வசூலிக்கப்படாது.
வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் நோக்கிலும் அவர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வந்ததாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.