அஜித்தை காப்பாற்ற முடியலன்னு வருத்தமா இருக்கு…வீடியோ எடுத்தவர் கொடுத்த பேட்டி!
அஜித் மரணத்தில் சாட்சிகளாக உள்ள அனைவரும் அச்சத்தில் உள்ளனர் என வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் பேசியுள்ளார்.

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக, அஜித் குமாரை காவலர்கள் தாக்கியதை கோவில் பணியாளர் சத்தீஸ்வரன் வீடியோவாக பதிவு செய்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சமர்ப்பித்தார். இந்த வீடியோ, காவலர்கள் அஜித் குமாரை பத்திரகாளியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் பைப் மற்றும் பிரம்பால் கொடூரமாகத் தாக்குவதைக் காட்டுகிறது, இது வழக்கில் முக்கிய சாட்சியமாகக் கருதப்படுகிறது.
சத்தீஸ்வரன், கோவிலின் கழிவறையில் மறைந்திருந்து இந்த வீடியோவை எடுத்ததாகவும், பின்னர் காவலர்களுக்கு அஞ்சி வெளியேறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், வீடியோவைப் பதிவு செய்ததற்காக, கைது செய்யப்பட்ட காவலர் ராஜாவின் தரப்பில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக சத்தீஸ்வரன் தமிழக காவல்துறை இயக்குநரிடம் (டிஜிபி) புகார் அளித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் சாட்சியாக உள்ள அனைவரும் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், காவலர்களால் மிரட்டப்படுவதாகவும் கூறி, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இது குறித்து பேசிய சதீஸ் “எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது. அஜித் குமாரை காப்பாற்ற முடியவில்லையே என்ற மனக் கஷ்டம் ரொம்பவே இருக்கு. நீதி வழங்கக்கூடிய தெய்வமாக பார்க்கப்படும் மடப்புரம் காளியம்மன் கோயில் முன்பு இப்படி நடந்ததை என்னால் ஏற்கமுடியவில்லை.
“அஜித் மரணத்தில் சாட்சிகளாக உள்ள அனைவரும் அச்சத்தில் உள்ளனர். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். நடந்தது என்ன என்பதை நீதிமன்றத்தில் கண்டிப்பாக தெரிவிப்பேன். நான் தான் அஜித்குமாரை அடித்தேன் என்று என் மீதே பொய் புகார் கூறினர்” எனவும் சத்தீஸ்வரன் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில், திருப்புவனம் குற்றப்பிரிவு காவலர்களான பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், மற்றும் ராஜா ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம், ஆறாவது காவலர் உட்பட சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். நீதிபதிகள், இந்தச் சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படாமல் விசாரணை நடத்தப்பட்டது ஏன் என்றும், கோவிலின் சிசிடிவி காட்சிகளை காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் எடுத்துச் சென்றது குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!
July 3, 2025