ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஜூலை 19 ஆம் தேதி மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதாக கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் இடைவெளியுடன் நடைபெறும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு ஜூலை 19ம் தேதி அன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இதனை இன்றைய செய்தியாளர் சாந்திப்பின்போது, கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார். மேலும், கூட்டத்தொடரை நீட்டிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று மாலை ஒரு பதிவின் மூலம் கிரண் ரிஜிஜு திருத்தப்பட்ட அட்டவணையை உறுதிப்படுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் காப்பீடு தொடர்பான மசோதாக்கள் உள்ளிட்ட பல மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பஹல்காம் தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்ப வாய்ப்புள்ளது. கூடுதலாக, எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி உள்ளிட்டோர் “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பாக சிறப்பு கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என முன்பு வலியுறுத்தியிருந்தனர், ஆனால் தற்போது மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.