அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!
மடப்புரம் அஜித் வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது.
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காவல்துறைக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது, மேலும் அவரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கும் வீடியோவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை சக்தீஸ்வரன் என்பவர் பதிவு செய்ததாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது, மாநில மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தும் அதிகாரம் கொண்டது.
அஜித்குமார் கொலை தொடர்பாக டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 6 வாரத்திற்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், ஆணையம் அரசுக்கு பரிந்துரைகள் வழங்கலாம், ஆனால் நேரடி தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக, மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அல்லது குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் புகார் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
தற்போது, இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணையில் உள்ளது, மேலும் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி, வரும் ஜூலை 8ம் தேதி அன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் அஜித்குமார் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.