காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது – பைடன் கருத்து
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே இன்று 10-வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹாமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இவர்களின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரையில் இந்த போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதுவரை 3.3 லட்சம் ராணுவ வீரர்களை காசா பகுதி எல்லையில் களமிறக்கியுள்ள நிலையில், வான்வெளி தாக்குதலை அடுத்து தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில், காஸாவை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காஸாவை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும் பலர், உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருவதோடு, உரிய சிகிச்சை கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்; காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், அதனை ஆக்கிரமிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஹமாஸ் அமைப்பிற்கு பாலஸ்தீனியர்கள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பு, அல்கொய்தா அமைப்பை விட பயங்கரமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.