புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “டிரம்பின் இந்த நடவடிக்கைகள் அமைதியை ஏற்படுத்த உதவாது என ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் விளக்கம் அளித்தார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தார். ஜூலை 8, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், உக்ரைன்-ரஷ்யா போரில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளுக்கு புடினை குற்றம் சாட்டினார். “புடின் மக்களைக் கொல்கிறார், அவர்களை மனிதாபிமானமாக நடத்தவில்லை. அவர் நாகரிகமாகப் பேசுவது வெறும் நாடகம்,” என்று டிரம்ப் கூறினார்.
தனது தேர்தல் பிரச்சாரத்தில், இந்தப் போரை ஒரு நாளில் முடிவுக்கு கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தாலும், அது நிறைவேறவில்லை என்பதால், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய முடிவு செய்ததாக ” அவர் தெரிவித்தார். டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் இன்டர்செப்டர் ஏவுகணைகள், ஹெல்ஃபயர் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஆயுதங்களை அனுப்ப ஒப்புதல் அளித்தார்.
“உக்ரைன் மிகவும் தாக்கப்படுகிறது. அவர்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டும், அதற்கு நாங்கள் உதவுகிறோம்,” என்று அவர் கூறினார். மேலும், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு 500% வரி விதிக்கும் பொருளாதாரத் தடைகள் மசோதாவை ஆதரிப்பது குறித்து “தீவிரமாக” பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார். இது, அவரது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது, ஏனெனில் அவர் முன்பு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியை அமெரிக்க உதவிகளுக்கு நன்றி கூறவில்லை என்று விமர்சித்திருந்தார். இப்போது இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், ட்ரம்ப் வைத்த இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசுகையில் “டிரம்பின் இந்த நடவடிக்கைகள் அமைதியை ஏற்படுத்த உதவாது,” என்று கூறினார். மேலும், டிரம்பின் கருத்துக்கள் உணர்ச்சிவசப்பட்டவை என்றும், ரஷ்யா உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை விரும்புவதாகவும், ஆனால் உக்ரைன் அதற்கு தயாராக இல்லை என்றும் தெரிவித்தார். ரஷ்யாவின் இந்த பதில், டிரம்பின் கடுமையான விமர்சனங்களுக்கு மாறாக மிகவும் நிதானமான அணுகுமுறையை வெளிப்படுத்தியது.
அதே சமயம், இந்த முடிவு, உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஆயுதங்கள், குறிப்பாக பேட்ரியாட் ஏவுகணைகள், ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொள்ள உதவும் என்று வரவேற்றது. டிரம்ப், செலன்ஸ்கியுடன் சமீபத்தில் நடந்த தொலைபேசி உரையாடல்கள் “மிகவும் நல்லவை” என்று கூறி, உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.