குக்கி-ஜோ சமூகத்தினர் அடக்கம் செய்ய திட்டமிட்டிருந்த புதைகுழி – மணிப்பூர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில், 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், மணிப்பூர் வன்முறையில் ஏற்கனவே கொல்லப்பட்ட 35 பேரின் சடலங்கள் இன்று அடக்கம் செய்யப்பட இருந்தது.
அதன்படி, இன்று மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள துய்புவாங்கில் உள்ள அமைதி மைதானத்தில் அடக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த இறுதிச் சடங்குகளை ஒத்திவைக்குமாறு பழங்குடியினப் பழங்குடித் தலைவர்கள் மன்றத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று, வன்முறையில் கொல்லப்பட்ட 35 பேரின் உடல் அடக்கத்தை மேலும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க பழங்குடியினர் தலைவர்கள் மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த இலையில், மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையில் கொல்லப்பட்ட 35 பேரை குக்கி-ஜோ சமூகத்தினர் அடக்கம் செய்ய திட்டமிட்டிருந்த சர்ச்சந்த்பூர் மாவட்டத்தின் ஹொலாய் கோபி கிராமத்தில் உள்ள புதைகுழியில் புதைக்க, தற்போது உள்ள நடைமுறையை பின்பற்றுமாறு மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் ஏற்கனவே கொந்தளிப்பான சூழ்நிலை காணப்படுவதை கருத்தில் கொண்டு, பொதுநலன் கருதி, தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் மற்றும் நீதிபதி ஏ.குனேஷ்வர் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
ஏற்கனவே மாநிலம் கொந்தளிப்பான சூழலில் காணப்படும் நிலையில், இரு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் கூடும் போது, சட்டம் ஒழுங்கு நிலைமையை மோசமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, அந்த நிலத்தின் முந்தைய நடைமுறையை கடைபிடிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, இந்த வழக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.