Asia Cup 2023 : இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு.! ரசிகர்கள் அதிருப்தி.!

2023 ஆசிய கோப்பை தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்து, தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தேர்வாகி விளையாடி வருகின்றன.
இன்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் விளையாட ஆரம்பித்தன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
ஏற்கனவே இந்த மைதானத்தில் மழை பெய்யும் வாய்ப்பு 90 சதவீதம் உள்ளது என இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த காரணத்தால், இந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக ‘ரிசர்வ் டே’ செய்யப்பட்டு இருந்தது. அதாவது ரிசர்வ் டே என்பது இந்த போட்டி இன்று மழை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டால் நாளை மீண்டும் இதே போன்று போட்டி தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் 56 மற்றும் 58 ரன்கள் அடித்து அவுட் ஆகி இருந்தனர். அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் 8 மற்றும் 17 ரன்களுடன் களத்தில் நிற்கின்றனர். இந்த சமயத்தில் தான் தற்போது மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.