இந்தியாவுடன் தோல்வி எதிரொலி : ஓய்வை அறிவித்தார் ஸ்டீவ் ஸ்மித்! 

நேற்று இந்திய அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த பிறகு இன்று ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

Steve Smith

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய முதல் அரையிறுதியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் விளையாடியது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

நேற்றைய தோல்வியை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் ஆஸி. அணி சார்பாக ஸ்மித் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்திருந்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு என்றும், சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதாக ஸ்மித் அறிவித்துள்ளார்.

ஸ்மித் செய்தியாளர் சந்திப்பு :

ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு குறித்து ஸ்மித் கூறுகையில், ” இது ஒரு சிறந்த பயணமாக இருந்தது. விளையாட்டின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். பல அற்புதமான நேரங்களும் அற்புதமான நினைவுகளும் உள்ளன. இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது ஒரு சிறந்த நினைவுகள் ஆகும். அதில் எனது பயணத்தைப் பகிர்ந்து கொண்ட பல அற்புதமான அணி வீரர்களும் இருந்தனர்.

2027 உலகக் கோப்பைக்குத் தயாராகத் தொடங்க மற்ற வீரர்களுக்கு இப்போது ஒரு சிறந்த வாய்ப்பு. எனவே அதற்கு வழி வகுத்துக் கொள்ள இதுவே சரியான நேரமாக உணர்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு முன்னுரிமையாக உள்ளது. மேலும் அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அதற்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நான் மிகவும் எதிர்நோக்குகிறேன். அந்த போட்டிகளில் நான் இன்னும் நிறைய பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” என தனது ஓய்வு குறித்து ஸ்மித் உருக்கமாக பேசினார்.

ஸ்டீவ் ஸ்மித் பற்றி..,

2010 பிப்ரவரி 19-ல் ஆஸ்திரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆஸி. அணி சார்பாக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 170 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5800 ரன்களை எடுத்துள்ளார். அதில் 12 சர்வதேச சதங்களும் அடங்கும்.  கடந்த 2015 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்