#Cricket Breaking: டெஸ்ட் தொடரின் நாயகனாகும் அஸ்வின்.. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 53/3!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 53 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி, தனது முதல் இன்னிங்க்சில் 329 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 134 ரன்கள் மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
மேலும், நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. இதனைதொடர்ந்து இன்று இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. போட்டி தொடக்கத்தில் இந்திய அணி சற்று தடுமாறியது. 7 ரன்கள் அடித்து புஜாராவும், 26 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா வெளியேறினார்கள்.
அதனைதொடர்ந்து களமிறங்கிய பந்த் 6 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் விராட் கோலி சிறப்பாக ஆடிவந்தார். பின்னர் களமிறங்கிய ரஹானே, 10 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 62 ரன்கள் அடித்து கோலி வெளியேற, பின்னர் களமிறங்கிய அஸ்வின், அதிரடியாக ஆடினார்.
இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அதிரடியாக ஆடிய அஸ்வின் 106 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக இந்திய அணி 85.5 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் எடுத்தது. அதனைதொடர்ந்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியில் பந்துவீச்சை தாங்காமல் தடுமாறியது. 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 53 ரன்கள் எடுத்தது. மேலும், 429 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி நாளைய ஆட்டத்தை தொடங்கவுள்ளது.